Wednesday, March 18, 2009

ஒழிஞ்சிப்போ சனியனே

ஒழிஞ்சிப்போ சனியனே

“ஒழிஞ்சிப்போ சனியனே” என்று பக்கத்தில் இருந்த நாயை விரட்டினார் வீட்டு வெளி திண்னையில் சாப்பிட்டு கொண்டு இருந்த ராமசாமி. பின் தொடர்ந்தார்

“எத்தனை முறை சொல்லி இருக்கிறேன், சாப்பிடும் போது பக்கத்தில் வந்து நிக்காதேனு, உனக்கு தான் தட்டில் தனியாக இருக்குதே..... போ அப்படி” என்று தன்னுடைய நாய் ராமுவை விரட்டினார். அவர் சாப்பிட்டு விட்டு கையை கழுவி வாசலைலில் இருந்து இறங்கு பொழுது, வீட்டில் இருந்து குரல் வந்தது

“மாமா இருங்க, காபி எடுத்துனு வரேன்” என்றது ஒரு பெண்ணின் குரல். ராமசாமி அப்படியே அந்த திண்னையில் அமர்ந்தார். நாய் குரைக்க ஆரம்பித்தது

“ஏய் இரு போலாம், கொஞ்ச நேரம் கம்முனு இருக்க மாட்டியா, நேர நேரத்துக்கு எல்லாம் நடந்துடனுமா உனக்கு, திமிர் பிடிச்ச சனியனே, உன்னை கூட்டினு போய் பழக்கியது தப்பா போச்சு” என்று நாயை பார்த்து கடுகடுத்தார். உள்ளே இருந்து 23 வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி கையில் காபியுடன் வந்தாள், நெற்றியில் போட்டு இல்லை, கழுத்தில் தாலி இல்லை, சாயம் போன புடவை, முகத்தில்
இளமையை தவிர எந்த அலங்காரமும் இல்லை. காபியை அவரின் பக்கத்தில் கொண்டு வந்து பயபக்தியுடன் வைத்தாள், அவரின் மருமகள் அன்னம். ராமசாமி அவளின் முகத்தை பார்க்கவில்லை, கடுகடு முகத்துடன் காபியை எடுத்து உறிஞ்சினார், அன்னம் வாசல் கதவுக்கு அந்த பக்கம் நின்றுக் கொண்டு இருந்தாள். ராமசாமி காப்பியை குடித்து முடித்து எழுந்தார், உள்ளே இருந்த அன்னம்

“மாமா வரும் பொழுது வயலில் இருந்து ஒரு வாழப்பழ தாரு வெட்டினுவாங்க, இன்னைக்கு அவரோட தெவசம்” என்றாள் பொறுமையாக.

ராமசாமி முகத்தை பார்க்காமல் தலையை மட்டும் ஆட்டி விட்டு, துண்டை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு தெருவில் நடக்க ஆரம்பித்தார், அவரை பின் தொடர்ந்து குரைத்ததுக் கொண்டே போனது நாய். மனதுக்குள் எதோ எதோ எண்ணங்கள் வந்து அவரை
ஆக்கிரமித்தன, இன்னையோட 2 வருடம் முடிஞ்சிப் போச்சு. அவனை தவம் இருந்து பெத்து வளத்து எமனுக்கு தாரை வாத்து கொடுத்து, இருந்த ஒரே பிள்ளை போனதும் மனைவியும் நோய் வாய்பட்டு இறந்து போனால். இப்பொழுது வீட்டில் ராமசாமியும், அவரின் மருமகளும் மட்டும் தான். தோட்டத்தில் வாழைத்தாரையும், இரண்டு வாழை இலையையும் அறுத்து அதை தோளில் சுமந்துக் கொண்டு வீட்டு திண்னையில் வைத்து விட்டு, சாத்தி இருந்த கதைவை தட்டி விட்டு அது திறக்க காத்து இருக்காமல். மறுபடியும் தெருவை நோக்கி நடந்தார் ராமசாமி, நாயும் தான். மனிதர் அந்த கிராமத்தில் மிகவும் மரியாதையாக வாழ்ந்தவர், மகனையும் மனைவியையும் பறிக் கொடுத்த பின்னர்
மனிதர் பேசுவதையே குறைத்துக் கொண்டார், குறிப்பாக மனிதர்களிடம் பேசுவதை. டீ கடையை நோக்கிச் சென்றார். ராமசாமி வருவதை பார்த்து டி கடையில் அமர்ந்து இருந்த அவரின் பக்கத்து வீட்டு முருகேசன் அப்படியே டீ கடையின் பின் பக்கம் மறைந்தான். ராமசாமி கடையை அடைந்தார், வாலிப பசங்க அவர்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டு இருந்தனர், அதில் ஒருவன்

“பாத்தியாடா மாப்பிள, ஓநாயை பாத்தவுடன் எப்படி ஆடு எஸ்ஸாவுது பார்” என்று சிரித்தான்.......சிரித்தனர்.

ராமசாமியின் காதில் இது விழிந்தது, டி கடைக்கார பெரியவர் உடனே “டேய் காலி பசங்களா, வெள்ளன வேலைக்கு போகாமல் இங்க என்னடா நின்னு வெட்டி பேச்சு, போங்கடா வேலைக்கு” என்று அனைவரையும் துரத்தினார். பசங்களும் சிரித்துக் கொண்டே
போனார்கள், அதில் ஒருவன்

“ச்சே அவன் மச்சக்காரன் டா, எனக்கு பக்கத்து வீட்டுல இருக்கே ஒரு செவுட்டு கெளவி” என்றான் ராமசாமி காதில் விழுவது போல. ராமசாமிக்கு கோபமாக இருந்தது, நாயும் அவர்களை பார்த்து குரைத்தது. டீ கடைக்காரர் வெளியே வந்து ராமசாமியிடம்

“ஐயா அவனுங்க கடக்குறாங்க விருந்தாளிக்கு பொறந்த பசங்க, அவனுங்க பேச்சையில்லாம் எடுத்துக்காதீங்க, இந்தாங்க பேப்பர் படிங்க” என்று தினசரி பேப்பரை கொடுத்து விட்டு டீ கைக்குள் போனான். ராமசாமி சகஜநிலைக்கு திரும்பினார்

“சின்ராசு இரண்டு பிஸ்கேட் எடுத்து ராமுக்கு போடுயா, காலையில் இருந்து கத்தினே இருக்கு. தினமும் பழக்கப்படுத்தினது தப்பாக போச்சு, சரியா என்னை காலையில் எழுப்பி விடுது இந்த பிஸ்கட்டுக்காவே” என்று சிரித்தார், டீ கடை சின்ராசு சிரித்தான். பாட்டிலில் இருந்து பிஸ்கட்டை எடுத்து போட்டான் ராமு வாலை ஆட்டிக் கொண்டே சாப்பிட்டான், ராமசாமிக்கு டம்ளரில் டீ வந்தது, ராமுவுக்கு அவனின் தட்டில் டீ வந்தது. இருவரும் டீயை குடித்தார்கள்.

“சின்ராசு மச்சக்காள வந்தானா?” என்றார் ராமசாமி.

“இல்லைங்க வர நேரம் தான் வந்துடுவார்” என்றான் சின்ராசு, மச்சக்காளை ராமசாமியின் பால்ய சிநேகிதன். இருவரும் சேர்ந்து தான் எங்கும் போவார்கள். மச்சக்காளை டீ கடைக்கு வந்தார்,

“வாடா பாவி உனக்கு நூறு வயசுடா இன்னும் நாப்பது வருஷம் உயிருடன் இருந்து யார் குடியை கெடுக்கப் போறீயோ” என்று சிரித்தார் ராமசாமி.

“அடப்பாவி நான் யார் குடியை டா இதுவரை கெடுத்து இருக்கேன், தனியா தானடா எனக்குனு மில்டரி சரக்கு வாங்கி வச்சி இருக்கேன்” இருவரும் சிரித்தார், சின்ராசும் சிரித்தான். சின்ராசு

“ஐயா நீங்க வந்தீங்கனா தான், அவர் முகத்துல சந்தோஷமே, இதுவரை மனசு கஷ்டப்பட்டுனு இருந்தார்ங்க” என்றான். உடனே மச்சக்காளை கோபத்தோடு

“என்னடா இன்னைக்கு அவங்க வம்பு வளத்தான்களா? .......ளி குடும்பத்தோடு கொளித்துடுறேன் அவங்கள” என்றார் ஆவேசமாக. அவரை ராமசாமி அவசரத்துடன் தடுத்தார்.

“வேண்டாம் மச்ச, அவனுங்க கிடக்குறானுங்க. நம்ம சின்ன வயசுல பண்ணாததா?” என்று சிரித்தார்.

“என்னடா பேசற, நம்ம வீட்டு பொண்ணை பத்தி தப்பா
பேசறாங்க,........ளி வெட்ட வேணாம் அவனுகள” என்று கொந்தளித்தார். ராமசாமி அவசரமாக கடையை விட்டு நடக்க ஆரம்பித்தார், ராமுவும் வால் ஆட்டியபடியும், மச்சக்காளை வாலை ஆட்டாமலும் பின் தொடர்ந்தனர். ராமசாமி நேராக மாமர நிழில் போய் நின்றார், அங்கு இருந்த கைத்து கட்டிலில் போய் தலையை சாய்த்த படி அமர்ந்தார். மச்சக்காளை அவரிடம் போய்

“டேய் ராமா எதாவது என்னிடம் நீ மறைக்கிறாயா?” என்றார் தோளை உலுக்கி. ராமசாமி அவரின் முகத்தை பார்க்காமல் துண்டால் தன்னுடைய முகத்தை மூடிக் கொண்டார்.

“சொல்லு ராமா, நான் எதாவது உதவி செய்யனுமா” என்று ராமசாமியின் முகத்தில் இருந்த துண்டை இழுத்தார். ராமசாமி அதை அழுத்தி முகத்தில் மூடிக் கொண்டு சத்தம் இல்லாமல் அழுதார். மச்சக்காளைக்கு விஷயம் புரிந்து விட்டது, தலையை தொங்கப் போட்டப்படி
தரையில் அமர்ந்தார்.

“பேசாமல் அவளுக்கு வேறு இடத்துல கல்யாணம் செஞ்சி கொடுத்துடு டா, ராமா” என்றார். ராமசாமி முகத்தில் இருந்து துண்டை விலக்கினார், மச்சக்காளையின் வார்த்தையை கேட்டுவிட்டு. தன்னுடைய கண்களை துடைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

“இரண்டாவது கல்யாணம் நா, யார்டா இவளை கல்யாணம் செய்துப்பா சொல்லு” என்றார் கண்களில் வரும் நீரை துடைத்துக் கொண்டு.

“இல்லன்னா எல்லா நாயும் இந்த மாதிரி எதாவது கதை சொல்லினு தான் இருக்கும், பொய்யினாலே உண்மை மாதிரி பேசுவானுங்க, இதில உண்மையினா .....ளி குடும்பத்தையே அழிச்சுடுவாங்க. சரி உனக்கு தெரியும்னு உன் மருமகளுக்கு தெரியுமா, யார் அந்த பையன்”

“ரொம்ப நாளாய் நடக்குது இது, என் வீட்டுக்கு பக்கத்துல இருக்குற, கந்தசாமியின் மூணாவது பையன் தான், அவனை சொல்லி தப்பு இல்ல, என்வீட்டு முண்டையை சொல்லனும், அவகிட்ட நான் பேசுவதே கிடையாது. இவளுக்கு என்ன திமிரு பாருடா, வரக் கோவத்துக்கு அவளை அருவாலால் ஒரே போடு, சாவட்டும் முண்ட” என்று கோபமாக சொன்னார் ராமசாமி. மச்சக்காளை ராமசாமியின் கண்களை நேராக பார்த்து விட்டு,

“டேய் ராமா நான் ஒண்ணு சொல்லுவேன், நீ தப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது”

“ம்ம்ம்ம்”

“நாம் லட்சுமி (ராமசாமியின் மனைவி) செத்து எத்தனை வருஷம் ஆவுது, அவள் இல்லாமல் நீ எவ்வளவு படுறீயே? ஏன்?”

“என்னடா கேள்வி இது, 30 வருஷ பந்தம் டா அது”

“அதே தான் நானும் கேட்கிறேன், கல்யாணம் ஆகி ஒரே வாரத்தில் புருஷனை பறி கொடுத்த பெண்னை இப்படி காலம் காலமாக வீட்டுக்குள்ளே அடைத்து வைத்து பத்தினியா இருனு சொன்னா எப்படி டா”

“அதுக்கு ஊர் மேயனுமா??”

“ராமா, கொஞ்சம் மனிஷனா யோசிச்சி பாருடா, சின்ன பொண்ணு அவளுக்கு ஆசை பாசம்மு எவ்வளவோ கனவுடன், கல்யாண வாழ்க்கையில் அடி எடுத்து வைத்து இருக்கும். அதோட விதி இப்படி எழுதிட்டான் ஆண்டவன்.......”

“இப்ப என்ன செய்ய சொல்ற”

“அவளுக்கு வேறு கல்யாணம் செய்து வை, இதுவே இவ செத்து உன் புள்ளையா இருந்தா அவனுக்கு இரண்டாவது மாசத்துலேயே கல்யாணம் செய்து வைத்து இருக்கமாட்ட, அனாதப்பொண்ணு அவளை இப்படி விடாதடா”

“என்னடா முட்டா.... மாதிரி பேசற, நம்ம ஜாதியில் யார் அவளை இரண்டாந்தாரமா கட்டிப்பா, அவளை அனுப்பி வைத்து விட்டு நான் சொத்துக்கு என்ன செய்றது” என்றார் கோபமாக.

“...........ளி அப்படி சொல்லு, இவ்வளவு சுயநலமா இருக்கற நீ, அப்ப எல்லாதையும் பொறுத்துனு தான் போகணும், புரியுதா?” என்றார் மச்சக்காளை கோபமாக.

“என்னடா இப்படி சொல்ற, சத்தியமா சுயநலம் எல்லாம் ஒண்ணும் இல்லைடா, சரி இப்ப என்ன செய்ய சொல்ற” என்றார் ராமசாமி தலையில் கைவைத்துக் கொண்டு.

“எல்லாதையும் கண்டும் காணாம இரு, ஒருநாள் அவளுக்கே இது தப்புனு படும், அப்ப அவளே நிறுத்திடுவாள். இந்த நாயிக்கு காட்டும் அக்கறையில் கொஞ்சமாவது உன் மருமகளுக்கு காட்டு” என்றார் மச்சக்காளை பொறுமையாக ராமசாமியின் தோளை பிடித்தபடியே,
நாய் மரத்து அடியில் படுத்துக் கொண்டு இவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தது. ராமசாமி அறை மனதாக அந்த இடத்தை விட்டு புறப்பட்டார், மதியானம் 12 மணி ஆகி இருந்தது, வீட்டை நோக்கி நடந்தார், மனதில் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் தோன்றின
மச்சக்காளை சொன்னது நினைவில் வந்துக் கொண்டே இருந்தது. வீட்டை நோக்கி நடந்தார். வீட்டின் கதை தட்டினார், திறந்து தான் இருந்தது. உள்ளே சென்றார் வீட்டிற்கு நடுவில் தன்னுடைய மகனின் போட்டோவின் எதிரில் படையல் வைத்து இருந்தது.

“வாங்க மாமா, கையை கழுவிட்டு வாங்க சாப்பிடலாம்” என்றாள் அன்னம். எதுவும் சொல்லாமல் கையை கழுவி விட்டு சாப்பிட அமர்ந்தார் ராமசாமி. மச்சக்காளையின் வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. இலையில் உணவு பரிமாறப்பட்டது

// சுயநல பிடித்தவன் டா நீ, // //புருஷனை ஒரே வாரத்தில் இழந்தவள்// //அவளுக்கு ஆசை உணர்ச்சி எல்லாம்// ராமசாமியின் மனதுக்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தது. ராமசாமியின் பக்கத்தில் வந்து ராமு நாய் மண்டிப் போட்டு உக்கார்ந்தது.

//23 வயசு சின்ன பொண்ணுடா அது பாவம்// இலையில் கையைவைத்து சாப்பாட்டை பிசைய ஆரம்பித்தார்.“மாமா சாம்பார்
ஊத்தட்டுமா”. //எதையும் கண்டுக்காம இருடா ராமா//. நாய் வல் வல் என்று குரைக்க ஆரம்பித்தது. “ம்ம்ம் ஊத்து” என்றார். மருமகள் சாம்பாரை ஊற்றினாள். நாய் வல் வல் என்று குரைத்தது ஒரு முடிவுக்கு வந்தவராக ராமசாமி தன்னுடைய இலை சாப்பாட்டில் இருந்து ஒரு கை பிடியை எடுத்து, அன்னத்தை பார்த்தபடி

“இந்தா ஒழுஞ்சிப்போ சனியனே” என்று ராமுவின் முன் வைத்தார்.

மனிதாபிமானம்

மனிதாபிமானம்




காலை 6.30, ராஜு அவசர அவசரமாக குளித்து விட்டு பூஜை அறைக்கு வந்தான், சாமியை கும்பிட்டுக் கொண்டே

“சுக்கலாம் பரதரம் விஷ்ணும் . . . . அம்மா டையம் ஆச்சு சீக்கிரம் டீபன் எடுத்து வை . . .சசிவர்ணம் சதுர்புஜம் . . .”

“டேய் சாமி ரூம்ல சாமியை பத்தி மட்டும் நன” என்றாள் அம்மா புன்சிரிப்புடன்.
வீட்டு ஹாலில் தூக்க கலக்கத்தில் உக்கார்ந்து இருந்த சொந்தகாரர்கள் அனைவரும் சிரித்தனர். ராஜுவும் பொய் கோபத்தோடு

“ஏன் சொல்லமாட்டிங்க இன்னைக்கு ஆபிஸ் வேலையா பாண்டி போணும், காலை சீக்கிரம் எழுப்ப சொன்னா எழுப்பாம நக்கல் வேற” என்று சாப்பிட டைய்னிங் டேபிலில் உக்கார்ந்தான்.
அதுவரை அமைதியாக இருந்த ராஜுவின் தங்கை மதி வந்து
“இங்க பார்டா” என்று அவள் தலையை ராஜுவிடம் காட்டினால்.
தலை உச்சியில் வீங்கி இருந்தது. ராஜுவும் சாப்பிட்டுக் கொண்டே இடது கையால் தொட்டு பார்த்து
“என்ன டீ இப்படி வீங்கி இருக்கு, எங்க இடிச்சிக்குன” என்று இட்டிலியை மென்றுக் கொண்டு கேட்டான்.

“டேய் காலையில வந்து உன்ன எழுப்புனதுக்கு நீ கொட்டினது, அதுக்கூட பரவாயில்லை ஆனா எங்க இடிச்சிக்குன கேட்ட பார் அதான் தாங்க முடியில” என்று ராஜுவை கொட்ட சென்றவளை அம்மா வந்து தடுத்து விட்டு
“ஏய் என்னடீ அவன் கூட எப்ப பார்த்தாலும் வம்பு, அவனுக்கு கல்யாணம் ஆவப் போவுது மரியாதையா நடந்துக்கோ இல்ல, வரவ உன் வாயை கிழிப்பா” என்று சிரித்துக் கொண்டு ராஜு சாப்பிட்டு முடித்த தட்டை எடுத்து கழுவினாள்.

“அண்ணி என் சைடு, அண்ணியும் நானும் சேர்ந்து இவன் வாயை கிழிப்போம்” என்றால் சீரியஸாக.

அதற்க்குள் ராஜு புறப்பட ரெடியாக வெளியே ஹாலுக்கு வந்தான், அங்கு கீழே படுத்து உறங்கிக் கொண்டு இருந்த மீதி சொந்தகாரர்களை தாண்டி வாசலில் வந்து ஷுவை அணிந்துக் கொண்டு இருக்கும் போது மதி வந்து எதிரில் நின்றாள்.

“என்ன இன்னொரு கொட்டு வேணுமா” என்றான் ராஜு சிரித்து கொண்டு.

“ஊ மூஞ்சி. . . , இந்தா” என்று கையில் இருந்த பளபள பார்சலை கொடுத்தாள்.

“ஏய் கருப்பி எதுக்கு டீ இதெல்லாம்” என்று பார்சலை பிரித்தான் உள்ளே மேனி மோர் ஹப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே என்று எழுதி அதன் கீழ் ஒரு ரேபான் கண்ணாடி இருந்தது.

“போனாப் போதுன்னு கொடுத்தேன் . . . . . அடுத்த மாசம் என் பர்த்டே வேர வருதுல்ல அதான்” என்று சிரித்தாள்.

“அதான பார்த்தேன் என்னடா காக்காவே வந்து வடை கொடுக்குதுன்னு, மொத்தமா எல்லாத்தையும் கொத்தினு போறத்துக்கு தானா, சரி அம்மாகிட்ட நான் களம்பிட்டேன் சொல்லிடு, வரேன் டீ காக்கா” என்றான்.

“போடா தூங்கு மூஞ்சி மரம்”

“போடீ அண்டங்காக்கா” என்று வந்து காரை எடுத்துக் கொண்டு விரைந்தான்.

“போட சப்பமூக்கு” என்றாள்.

“ஏய் தோ வரேன்” உள்ளே இருந்து அம்மாவின் குரல் கேட்டதும் ஓடி மறைந்தாள்.

டிராபிக் எல்லாம் தாண்டி ஈசிர் ரோடு வந்து சேர்ந்தான். ஒரு பெருமூச்சுடன் அப்பாடி இனிமேல் நிம்மதியாக காரை ஓட்டலாம் என்று நினைத்து போனை எடுத்தான்.

“ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ
ஜகதாரணி நீ
பரிபூரணி நீ . . .”
என்று ராஜுவின் செல்லில் கால் வந்தது.

“ஹாய் ஹனி, உனக்கு தான் செய்யலாம்னு செல் எடுத்தேன் நீயே பண்ணிட்ட”

“. . . . . . . . .”

“அத ஏன் கேக்குர, ராத்திரி முழுக்க நாம போன்ல பேசுன எங்க காலையில ஏழுறது, சம லேட் ஆச்சு பத்து மணிக்கு பாண்டி ஆபிஸ்ல இருக்கனும், சரி நம்ம நிச்சயர்தார்தம் ஆல்பம் வந்துடுச்சி பார்த்தியா” என்றான்.

கார் டோல் கேட்டை அடைந்தது கண்ணாடியை இறக்கினான்.

“ஜெனி வெய்ட் எ செக்கண்டு.. . . .சார் ஒரு ரிட்டன் கொடுங்க”

என்றான் டோல் கேட் கவுண்டரில், சீட்டை வாங்கிக் கொண்டு வண்டியை மெதுவாக நகர்த்தினான். ஒரு கொய்யா பழ விற்க்கும் சிறுவன் கண்ணாடி சந்தின் வழியாக கொய்யா பழ கவரை நீட்டி

“சார் சார் வாங்கிக்கொங்க சார், தேன் கொய்யா சார்”

என்று ஓடி வந்தான், கார் வேகம் எடுப்பதை பார்த்து கவரை வேண்டும் என்று உள்ளே போட்டான். கொய்யா பழங்கள் சிதறி ராஜுவின் தொடையில் கொட்டியது. ராஜு கோபத்தொடு காரை நிறுத்தினான்.

“டேய் சென்ஸ் இல்ல” என்றான் பின்னாடி ஓடிவந்த சிறுவனை நோக்கி.

அவன் மூச்சை வாங்கிக் கொண்டு

“. . . இ. . . இல்ல. . . இல்ல சார் கொய்யா மட்டும்தா இருக்கு” என்றான் பரிதாபமாக. சீட்டின் மேல் இருந்த போனில் சிரிப்பு ஓலி கேட்டது. இவனும் சிரித்துக் கொண்டு பத்து ரூபாய் எடுத்து நீட்டினான்.

“தாங்ஸ் சார் அடுத்தவாட்டி வாங்க அந்த பழம் வாங்கி வைக்கிறேன்”

என்று அடுத்த காரில் இதே போல நூதன வியாபாரம் செய்ய ஓடினான் அந்த சிறுவன். போனில் சிரிப்பு ஓலி அதிகமாக கேட்டது. ராஜு போனை எடுத்தான்

“. . . . . . . . .”

ராஜு சிரித்துக் கொண்டு “பல்பு எல்லாம் ஒண்ணும் கடையாது, அவனுக்கு இங்கலீஷ் தெரியிலனா நான் என்ன பண்றது”

“. . . . . . .”

மறுபடியும் சிரித்து “அவசரத்துல வந்துடுச்சி விடு, சரி பட்டு செம லேட்டு யிடுச்சு வில் கால் யூ லேட்டர்” என்றான்.

“. . . . . . .”

“ஓகே சுவீட்டி ப்ப்ச்ச்ச்ச்” என்று போனை கட் செய்தான்.

காரை அவசரத்தில் வேகமாக ஓட்டினான் முன்னே இருந்த பைக்கை ஓவர் டேக் செய்தான். குறுகிய வளைவு வந்ததினால் ப்ரேக்கை அழுத்தினான், ஆனால் அழுத்த முடியவில்லை எதோ தடுத்தது பதற்றத்துடன் கீழே பார்த்தான் ப்ரேக்கு கீழ் கொய்யா பழம் மாட்டிக் கொண்டு இருந்தது, அவனால் குனிந்து எடுக்க முடியவில்லை. கார் வளைவை நெருங்கியது ராஜுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ப்ரேக் மேல் ஏறி நின்றான். கொய்யா பழம் நசுங்கி வண்டி பேய் சப்ததுடன் நின்றது.

ஆண்டவன் புண்யத்தில் எதிரே எந்த வண்டியும் வரவில்லை என்று சந்தோஷமாக பெருமூச்சு விட்டான் கண் இமைக்கும் நேரத்தில் காரின் பின்னாடி

“டமார். . .ர்” என்ற சத்தம் ராஜுவை நிலைக்குலைய வைத்தது. குனிந்து இருந்த ராஜு நிமிர்ந்தான் அவன் காரின் மேலே ஒரு ஆள் பைக்குடன் பறந்து போய் நடு ரோட்டில் விழந்தான், பைக்கு ஒரு புதர் பக்கத்தில் விழந்தது. ராஜு அவரை தூக்கி காரின் முன் சீட்டில் போட்டுக் கொண்டு வேகமாக காரை ஓட்டினான். அடிப்பட்டவர் மூப்பது வயது இருக்கும் கழுத்தில் தங்க சங்கிலி இருந்தது,கையில் மோதிரம், ப்ரேஸ்லட் இருந்தது. சுயநினைவுடன் தான் இருந்தார். மூச்சு விட சிரமப்பட்டார் உடனே ராஜு ஏசியை அவர் பக்கம் திருப்பினான்.

“ப்பா. . . என் தப்பா” என்றார்.

“இல்ல சார், இல்ல சார் என் தப்புதான் சார் சாரி சார்” என்றான் கலங்கிய கண்ணகளுடன்.

“சாரி. . . . . வச்சின்னு.. . . .ஓன். . . பண்ணமுடியாது” என்று கூறி வண்டியை நிறுத்த சொல்லி கையை அசைத்தார். ராஜுவும் பதட்டத்துடன் காரை நிறுத்தினான். தண்ணி கேட்டார். குடிக்க முடியாமல் கஷ்டப்பட்டு குடித்தார்.

“இந்த சைடு எந்த ஆஸ்பத்திரியும் இல்லை. . . . நெஞ்சு ரொம்ப வலிக்குது” என்றதும் ராஜு மார்பை தேய்துவிட சீட்டில் சாய்ந்து உக்கார்ந்தவரின் சட்டை பட்டனை அவிழ்த்து மார்பை பார்த்து

“ஓ . . ஷ்ட்டு” என்று முகத்தை திருப்பி கொண்டான். நெஞ்சு எலும்புகள் அனைத்தும் நொறுங்கி வெளியே குத்திக் கொண்டு இருந்தது.

“காரை ஓட்டத்தெரியாம . . . . .ஏண்டா . . . . தாலி அறுக்குரிங்க. . . என்ன வயசு. . . உனக்கு. . .” என்றார் அடிப்பட்டவர்.

“இன்னையோட 25 முடியுது சார்”

“ப்பாத்து வரகூடாதா. . . எனக்கும் கஷ்டம் . . உனக்கும் . .கஷ். . .” என்றார்.

ராஜு தலையில் அடித்துக் கொண்டு “எனக்கு இன்னும் இரண்டு நாள்ள கல்யாணம் சார்” என்று அழுதான்.

“எனக்கு. . . கல்யாணம் கி. . . . . இரண்டு வாரம் . . . தான் ச்சு. . . . . லவ் மேரேஜ்”

என்றார் அடிபட்டவர் கலங்கி கண்களுடன். ராஜுவுக்கு தூக்கி வாரிப் போட்டது, கண்ணீர் அதிகமாகியது.

“நாங்களும் லவ் மேரேஜ் தான் சார், எனக்கு அதன் வலி தெரியும் நான் எப்படியாவது உங்களை காப்பாத்திடுரேன் சார்” என்று காரை வேகமாக ஸ்டாட் செய்தான். அவர் அவனை ஆப் செய்ய சொல்லி சைகை செய்து சிரமத்துடன் பேசினார்.

“நான் சொல்வதை கேள். . .நான் பொழைக்க மாட்டேன். . .கல்யாணம் வச்சின்னு வீணா வம்புல மாட்டாதே. . . இந்த சைடு டோல் கேட்ல போலீஸ் நீக்கும் தாண்டி . . . போக முடியாது . எப்படியும் டோல் கேட்ல கார் நம்பரை டிரேஸ் பண்ணிடுவாங்க. . .அவ்வுளவு தூரம் நான் தாங்கவும் மாட்டேன் . . . என்னை ஆக்சிடெண்டு . . . ஆன எடத்துல போட்டுட்டு போய்டு. . . .” என்றார்.

“சார் என்ன சார், வேண்டாம் எந்த பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்குறேன்” என்றான் ராஜு.

“ஒருத்தியோட வாழ்க்கை தான் போச்சு . . . இன்னொருத்திதும் வீணாக வேண்டாம், அவளை சந்தோஷமா வச்சிக்கோ” என்றார்.

ராஜுவுக்கு அவர் காலை தொட்டு கும்பிடவேண்டும் போல இருந்தது. கண்ணீருடன் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவர் வண்டியை திருப்ப சொல்லி சைகை காட்டினார். ராஜுவும் செய்வது அறியாது அவர் சொன்ன மாதிரி வண்டியை திருப்பினான். அவர் தனக்குள் பேசிக் கொண்டு வந்தார்.

“எல்லாரையும் எதிர்த்து. . . என்னை மட்டும் நம்பி . . .
வந்தியே. . . . , உன்ன தனியா விட்டுட்டு போறனே. . . ..எப்படியொல்லாம் உன்ன வாழ வைக்கனும். . . . . . நனச். . . . . . செல்லம் என்ன மன்னிச்சுடு டீ. . மன்னிச் . .”.

கார் ஆக்ஸிடண்ட் ஆன இடத்தை அடைந்தது. ராஜு வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு கதவை திறந்து

“சார் எடம் வந்துடுச்சு” என்றான்

,ஆனால் அவர் உயிருடன் இல்லை. தூரத்தில் போலீஸ் சயரன் சத்தம் கேட்டது ராஜுவுக்கு பதற்றம் அதிகமாகியது. அவரை அவசரமாக தூக்கினான், அவர் பாக்கெட்டில் இருந்து ஒரு கார்டும், செல்லும் ராஜுவின் காரில் விழுந்தது ராஜு அதை கவனிக்கவில்லை. அவரை பைக் கிடந்த இடத்துக்கு பக்கத்தில் நிழலில் கிடத்திவிட்டு அவசரமாக காரை எடுத்துக் கொண்டு வேகமாக விரைந்தான். ராஜுவின் மனசாட்சி அவனை கொன்றது. கண்களில் கண்ணீர் பொங்க காரை ஓட்டினான். அப்பொழுது சீட்டின் மேலே இருந்த கார்டையும்,செல்யும் பார்த்தான். அந்த ஐ.டீ கார்டை எடுத்து பார்த்தான்

“ S. Rangarajan
sub-inspector
crime branch
pondy”

என்று இருந்தது. ராஜுவின் கார் தடுமாறி ஓரத்தில் நின்றது. அப்பொழுது அந்த செல்லில் கால் வந்தது.

“உனக்கே உயிரானேன்
என்னாலும் எனை நீ மறவாதே,
நீயில்லாமல் ஏது நிம்மதி
நீ தான் என்றும் என் சன்னிதி. . .
கண்ணே கலைமானே. . . . . .”
என்ற பாடல்.
ராஜு செல்லை எடுத்து பார்த்தான்.

“செல்ல குட்டி காலிங்” என்று வந்தது.

Thursday, January 29, 2009

வழித்துணை



நகரத்தின் மிகவும் நெரிசல் மிகுந்த தெரு, எப்பொழுதும் கூச்சலும் குழப்பமும் குடிக்கொண்டு இருக்கும். தெருவின் இரு பக்கமும் அதற்க்கு காரணமாக இருக்கும் குடிசைகள், குழந்தைகள் அனைவரும் சமத்தாக அங்கே இருக்கும் சாக்கடையில் விளையாடி கொண்டு இருந்தனர். அந்த சின்ன சின்ன குடிசைகளுக்கு நடுவே மிகப்பெரிய துரு பிடித்து போன இரும்பு கேட், அந்த கேட்டை நோக்கி ஒரு பைக் வேகமாக வந்தது. சற்று திறந்து இருந்த கேட்டை பைக்கின் முன் சக்கரத்தால் திறந்துக்கொண்டு சென்றனர் பைக்கில் வந்த இருவரும். இவர்கள் உள்ளே நுழைந்ததும் அங்கே தாயபாஸ் விளையாடிக் கொண்டு இருந்த ஒரு கும்பலில் இருந்து இரண்டு பேர் இவர்களை நோக்கி வந்தனர், வேகமாக வண்டியில் வருபவார்களை நிறுத்துவது போல கையை அசைத்தனர்.

“சார் நிறுத்து நிறுத்து உள்ளே யாரும் இல்ல, சீப்பா முடிச்சீத்தரேன்...”

என்று ஒருவன் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே வண்டியில் வந்தவர்கள் மதிக்காமல் அவர்களை தாண்டிச் சென்றனர். இருவரும் திரும்ப போய் ஆட்டத்தில் சேர்ந்தனர்.அங்கு ஒருவன்

“என்ன மாமே ஆச்சு” என்றான் தாயத்தை உருட்டிக் கொண்டு.
“எங்க மச்சான் மடக்கலான்னு பார்த்தா, கசுமாலம் போய்க்கினே இருக்குது, சரி இப்ப உய்து பார் தாயம், அடிங்கொப்பன் டாடி” என்று சொல்லிக் கொண்டு தாயபாஸை உருட்டினான்.
பைக்கை நிறுத்தி விட்டு ரங்காவும் அவனுடைய நண்பனும் இறங்கி ஒரத்தில் இருந்த அறையை நோக்கி நடந்தனர். அது ஒரு சிறிய அறை, கூட்டமாக அனைவரும் ஒன்று சேர எதோ கேட்டுக் கொண்டு இருந்தனர். ரங்கா அந்த அறையின் வாசலில் வந்து நின்றான். அந்த இடத்தின் கவுச்சி வாடையும், ரோஜாக்களின் வாசனையும் சேர்ந்து வயிற்றை புறட்டிக் கொண்டு வந்தது ரங்காவின் நண்பனுக்கு அடக்கிக் கொண்டு கூட்டத்திற்க்கு பின் நின்றான். அப்பொழுது ஒரு குரல்

“ஏங்க இப்படி வந்து நின்னா, நான் எப்படி வேலை செய்ய முடியும், அப்புறம் சர்டிபிக்கேட்ல பேர் தப்பா எழுதிட்டா உங்களுக்கு தான் பிரச்சனை, யோவ் முனுசாமி எரிக்கிறவங்க ஒரு சைடு, புதைக்கிறவங்க ஒரு சைடு நிக்கவையா, அதுவும் நானே செய்யுனுமா” என்றது ஒரு குரல்.

முனுசாமி கூட்டத்தினரை நோக்கி “சார் எரிக்கிறவங்க ஒரு சைடு, புதைக்கிறவங்க ஒரு சைடு நில்லுங்க, எல்லாரும் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணா சீக்கிரம் வேலை முடிஞ்சிறும்” என்றார்.

அனைவரும் ஒழுங்காக வரிசையில் நின்றார்கள், அப்பொழுது தான் நடுவில் உக்கார்ந்து இருந்த அதிகாரி வெளிப்பட்டார். அறை முழுவதும் மங்களான வெளிச்சம், வெள்ளை நிற சுண்ணாம்பு சுவர்கள் கருப்பு நிறத்தில் மாறி இருந்தது, இரண்டு உடைந்த நாற்காலி, ஒரு உடையப் போகும் மேஜை அதன் மேல் கொஞ்சம் பைல்கள். ரங்காவிற்க்கு என்ன செய்வது என்றே புரியவில்லை வரிசையில் நின்றான். பதற்றத்துடன் மணியை பார்த்தான், கையில் வடிந்த வேர்வையில் கடிகாரம் நனைந்து இருந்தது, அதை துடைத்து விட்டு பார்த்தான் மணி 1.30. வெளியில் தப்பான இடத்தில் குயில் அழகாக கூவிக்கொண்டு இருந்தது, ரசிக்க ஆள்தான் இல்லை. சமாதியின் மேல் மதிய உணவு உண்ணும் பெரியவர், பள்ளம் தோண்டி கிடைத்த எலும்புக்காக சண்டையிடும் நாய்கள், சமாதியில் ஒளிந்துக் கொண்டு கண்ணாமூச்சி விளையாடும் குழந்தைகள், அனைவரும் அவர்கள் வேலைகளில் மும்முரமாக இருந்தார்கள், யார் குயிலின் கூவலை ரசிப்பார்கள். மணி 1.45 ரங்கா கடைசியாளா அதிகாரியின் முன் நின்றான்.

“என்னப்பா எரிக்கனுமா? புதைக்கனுமா?” என்றார் பேப்பரில் எதோ எழுதிக் கொண்டே ரங்காவை பார்க்காமல் கேட்டார்.
“புதைக்கனும் சார்”.
“குடும்ப வழக்கமா புதைக்கிற எடம் எதாவது இருக்கா, இல்ல நல்லதா நானே ஒரு எடம் தரட்டா, கொஞ்சம் செலவு ஆவும் அத பத்தி பொறவு பேசிக்கலாம்” என்றார் அதிகாரி.
“இல்ல சார் நேத்தே வந்து எங்க மாமா எல்லா ப்ரோசிஜர் முடிச்சாச்சு, டாக்டர் சர்டிபிக்கேட் தர வந்தோம்” என்றான் ரங்கா அவசரமாக.
“அப்புறம் எதுக்கு லைன்ல நின்ன, நேரா வர வேண்டியது தானே, சரி எந்த ஏரியா பாடி” என்று அலுத்துக் கொண்டே மேஜையில் இருக்கும் பைல்களை புரட்டினார்.
“பேரு சுகுமார், வயசு 56..” என்று ரங்கா மணி பார்த்துக் கொண்டு சொல்ல. “யப்பா ஏரியா பேர சொல்லு”
“கா. . .காந்தி நகர்”
“ஓ. . .காந்தி நகர் பாடியா, இரண்டு, மூணு டிடைல் எழுதாம போய்ட்டார் உங்க சித்தப்பா”
“சித்தப்பா இல்லைங்க மாமா” என்றான் ரங்கா.
“ரொம்ப முக்கியம், உக்காந்து சீக்கிரம் எழுது மணி இப்பவே இரண்டு ஆவப்போது ராவுகாலத்துக்கு முன்னாடி பாடி எத்து வந்துருவாங்க (ரங்காவிடம் படபடப்பு அதிகமானது) கடைசி நேரத்துல வந்து மாமா சித்தப்பான்னு தமாஸ் பண்ற,................. என்ன பேனா இல்லையா இந்தா போறப்ப மறக்காம குடுத்துட்டு போ” என்று பேனாவை மேஜை மேல் வைத்தார்.

ரங்கா எதையும் காதில் வாங்காமல் காகிதத்தில் விட்டுப்போன இடத்தை பூர்த்தி செய்தான், வீட்டு விலாசம், வயது, ஆனால் ஒரு இடத்தில் அவனுடைய கையும் பேனாவும் உறைந்து நின்றது, அது இறந்தவரின் பிறந்த தேதி?.

“யப்பா ஏய் எக்ஸாமா எழுதர, இவ்வுளவு நேரமா?, என்ன தேதி தெரியலையா, வீட்டுல போன்ன போட்டு இறந்தவருடைய பையன் இல்ல பொண்ணுக் கிட்ட கேளு” என்றார் அதிகாரி.
ரங்காவின் கண்களில் கண்ணீர் கசிந்தது “நான் தான் அவருடைய பைய. . . ., இல். . . என்னுடைய அப்பா சார் அவரு” என்று மேலே எதுவும் சொல்ல முடியாமல் நிறுத்தினான்.
“அப்பா பிறந்த தேதி உனக்கே தெரியாதா!!!!!!!!!! சுத்தம்! சரி மகன்னு சொல்ற, நீ எதுக்கு வந்த கடைசி நேரத்துல, சாங்கியம் எல்லாம் நீ தான் செய்யுனும், களம்பு களம்பு” என்றார்.

ரங்கா அந்த அறையை விட்டு புறப்பட்டான்.“யோவ் முனுசாமி பார்யா இந்த காலத்து பசங்கள, நாம அவுங்களுக்காக தான் பொணத்தோட பொணமா இங்க வேந்து சாவுறோம், ஆனா பார் கடைசியில ஒரு நாள் அழுவையோட நம்ம கதை முடிஞ்சுடுது” என்றார்.
“அத ஏ சார் கேக்குற, என் பையன் நேத்து என்ன செம அடி அடிச்சுட்டான் சார், பொண்டாட்டிய அடிச்சதுக்கு”
“எதுக்குயா, நீ தான் எப்பவும் அவளை அடிப்பியே” “ஆமா சார், நேத்து குடிச்சுட்டு என் பொண்டாட்டின்னு நன்ச்சீக்குனு, பக்கத்து ஊட்டுக்காரன் பொண்டாட்டியை அடிச்சா உடுவானா அதான் போறட்டிடான்”
“பக்கத்து ஊட்டுக்காரன் பொண்டாட்டியை அடிச்சதுக்கு ஏ பையன் உன்ன அடிச்சான்”
“பக்கத்து ஊட்டுல அவன் தான் கூடியிருக்கான், நா அடிச்சது அவன் பொண்டாட்டியை”
“ச்சீ போய் டீக்கடையில ஒரு வடை வாயினு வா” என்று எழுந்த அதிகாரி தண்ணி பாட்டிலை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்.

நண்பர்கள் இருவரும் வேகமாக வண்டி இருக்கும் இடத்தை நோக்கி சென்றார்கள்.
“தம்பிகளா யாராவது ஒருத்தர் குழி தோண்டர இடத்துல இருந்தா நல்லது” என்றார் அதிகாரி கையை கழுவிக் கொண்டு.புறப்பட தயாராக இருந்த ரங்காவும் அவனது நண்பனும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “மச்சா நான் இருக்கேன், நீ சீக்கரம் களம்பு” என்று ரங்காவை அனுப்பி விட்டு அதிகாரியை நோக்கிச் சென்றான் ரங்காவின் நண்பன்.
“சார் எங்க எங்களுக்கு எடம் ஒதுக்கி இருக்கிங்க” என்றான் அதிகாரியை பார்த்து.
“கடைசியில மாசானம் ஒருத்தன் குழி வெட்டினு இருப்பான் பார் அதான் உங்களுது, எங்க இன்னிக்கு மட்டும் எட்டு பாடி, எடமே இல்ல, பாரு எல்லா வேலையும் முடிச்சிட்டு இப்பதான் சாப்பிட போறேன்” என்று அதிகாரி உள்ளே சென்றார்.
இவனும் அந்த இடத்தை நோக்கி நடந்தான். சுற்றிலும் சமாதி வழியெங்கிளும் சமாதிகள், பளிங்காள் இழைத்த பணக்கார சமாதி பக்கத்திலே பூமியோடு அமுங்கிபோன ஏழையின் சமாதி என்று பல காட்சிகளை கடந்து அதிகாரி சொன்ன இடத்தை அடைந்தான்.

“ஏம்ப்பா நீ தான் மாசானமா” என்றான் அங்கு குழி தோண்டிக் கொண்டு இருந்தாவனை பார்த்து.
“அவன் அங்க தோண்டினு இருக்கான் பார்” என்று திரும்பி பார்க்காமல் தோண்டிக் கொண்டே சொன்னான்.அதற்க்குள் எதிர் திசையில் இருந்து ஒரு குரல் வந்தது
“சாமி இங்க வாங்க தோ இருக்குது நம்ம எடம்”குரல் வந்த திசையை நோக்கி சென்றான்.
“ஏம்பா ஆபீஸர் அந்த இடத்திலன்னு சொன்னார், நீ இங்க தோண்ற” என்றான்.
“.. .. .. அவன் சொல்லுவான் நோவாம, தோன்றவனுக்கு தான் கஷ்டம் தெரியும், அதவிட இது நல்ல எடம் சாமி, காத்தோட்டம் சுப்பரா இருக்கும்” என்று சிரித்தான்.
“யோவ் என்ன நக்கலா, எடத்தை மாத்திட்டு சிரிக்கிர இரு நான் போய் ஆபிஸரை பார்த்துட்டு வரேன்” என்றான் கோபமாக.
“சரி சீக்கிரம் போய்டு வா, உனுக்கு தான் டையம் வேஸ்டு, இன்னும் கொஞ்ச நேரத்துல பாடி வந்துடும், ஓரமா எறக்கி வச்சுட்டு தோண்டி முடிக்கிறவடையும் ஒக்கார்ந்துன்னு இரு” என்றான் மாசானம் பீடியை பற்ற வைத்துக்கொண்டு.

இவனுக்கு சங்கடமாகி விட்டது, ரங்காவுக்கு உதவி செய்ய வந்து உபத்திரம் செய்து விடக்கூடாது என்று அமைதியாக பள்ளத்தை நோக்கி வந்தான்.
“என்ன தோண்ட வா வானாமா, சீக்கிரம் சொல்லு நாத்திக் களம சாந்திரம் வந்து பேஜார் பண்ணாத” என்று சலித்துக் கொண்டு புகையை விட்டான்.
“சரி சரி ஒழுங்கா தோண்டு” என்று அமைதியாக நின்றான்.
“சாமி கவல படாத சூப்பரா பண்ணிடலாம்” என்று பீடியை தூக்கி
எறிந்தான்.மாசானம் பள்ளதில் இறங்கி கிடு கிடு என்று தோண்ட ஆரம்பித்தான், தீடீர் என்று நிறுத்தியவன் உள்ளே மண்ணில் இருந்து வந்த புடவையை எடுத்து வெளியில் போட்டான். இதை பார்த்த ரங்காவின் நண்பன் அதிர்ச்சியுடன்
“யோவ் என்னயா இது, புடவ வருது அதுக்குதா இந்த குழி வேண்டா சொன்ன”
“சாமி இதுலயாவது புடவ, நீ சொன்ன குழியில் இப்ப தான் எலும்பெல்லாம் எடுத்து அவன் வெளியே போட்டான் நீ கவலபடாம அப்படி போய் நீல்லு சாமி” என்றான்.

வாசலில் தாரை தப்பட்டை சத்தம் கேட்டது ரங்கா தீச்சட்டியை முன்னால் தூக்கிக் கொண்டுவந்தான். சடலத்தை இறக்கினார்கள்.
“சாமி பாடயை திருப்பி போடுங்க, சரி கோழி எங்க சாமி” என்றான் மாசானம். அனைவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
“நான் அப்பவே நனச்சன்பா” என்றார் பெரியவர்.
“நனச்சா சொல்ல வேண்டியது தான” என்றான் ஒரு சிறுசு.
“என்ன சாமி சனி களம செத்தா ஒரு கோழி பாடையில கட்டினு வரணும் தெரியாதா, சனி பொணம் தனியா போவாதுன்னு சொல்லுவாங்க, உங்க வீட்டு ஆளுங்க நல்லதுக்கு தான் சொல்றேன் சாமி, கோழிய அறுக்கும் போதே அந்த தீட்டும் போய்டும், சரி பரவாயில்லை வெளிய நம்ம ஆளு கட இருக்கு போய் யாராவது வாய்யினு வாங்க” என்று அதற்க்குள் குழி தோண்டி முடித்தான்.

கோழியும் வந்தது சாங்கியம் அனைத்தும் செய்து விட்டு, அந்த கோழியை இறந்தவரின் கால் பக்கத்தில் வைத்தான், அப்புறம் எட்டு கட்டையில் அலங்கோலமாக ஒரு பாடலை இறந்தவருக்காக பாடி கோழியின் உயிரையும் வழித்துணையாக அனுப்பினான். கோழியை அறுத்து ரத்ததை குழி சுற்றி தெளித்தான். ரங்கா மண்ணை தூவினான், அனைவரும் கடைசியாக முகத்தை பார்த்தார்கள். மாசானம் மண்னை குழியில் தள்ளிக் கொண்டு கடைசியில் அந்த அறுபட்ட கோழியையும் மேலே புதைத்தான். அனைவரும் கற்பூரம் ஏற்றி விட்டு நகர்ந்து போக ஆரம்பித்தனர்.உடனே மாசானம்

“எல்லாரும் எதாவது காசை அந்த அரிசித்துணில போட்டு, அப்படியே திருப்பி பாக்காம போங்க சாமி” என்றான். ரங்கா தேம்பி தேம்பி அழுதுக் கொண்டு சென்றான் அனைவரும் அவனை சமாதானம் செய்துக் கொண்டே சென்றனர். மாசானம் அதையே அவர்கள் போகும் வரை பார்த்துக் கொண்டு நின்றான், பின்பு பெருமூச்சுடன் சமாதியில் சில்லரையுடன் இருந்த அரிசி துணியை எடுத்து தோளிலில் போட்டுக்கொண்டு, மேலாக புதைக்க பட்ட கோழியை தோண்டி எடுத்து மண்னை உதறிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

மரணம் என்பது தான் உலகத்திலே மிகவும் பரிதாப்பத்திற்குரிய விஷயம், ஆனால் அந்த மரணத்தில் மாசானம் போன்ற மனிதர்களின் வாழ்க்கை ஓடுகிறது. இந்த ஏக்கம், ஏற்றத்தாழ்வு, ஏழ்மை, எல்லாம்.............யாரை கேட்பது பதில் தராத கடவுளை தவிர.................................... நன்றி