Wednesday, March 18, 2009

மனிதாபிமானம்

மனிதாபிமானம்




காலை 6.30, ராஜு அவசர அவசரமாக குளித்து விட்டு பூஜை அறைக்கு வந்தான், சாமியை கும்பிட்டுக் கொண்டே

“சுக்கலாம் பரதரம் விஷ்ணும் . . . . அம்மா டையம் ஆச்சு சீக்கிரம் டீபன் எடுத்து வை . . .சசிவர்ணம் சதுர்புஜம் . . .”

“டேய் சாமி ரூம்ல சாமியை பத்தி மட்டும் நன” என்றாள் அம்மா புன்சிரிப்புடன்.
வீட்டு ஹாலில் தூக்க கலக்கத்தில் உக்கார்ந்து இருந்த சொந்தகாரர்கள் அனைவரும் சிரித்தனர். ராஜுவும் பொய் கோபத்தோடு

“ஏன் சொல்லமாட்டிங்க இன்னைக்கு ஆபிஸ் வேலையா பாண்டி போணும், காலை சீக்கிரம் எழுப்ப சொன்னா எழுப்பாம நக்கல் வேற” என்று சாப்பிட டைய்னிங் டேபிலில் உக்கார்ந்தான்.
அதுவரை அமைதியாக இருந்த ராஜுவின் தங்கை மதி வந்து
“இங்க பார்டா” என்று அவள் தலையை ராஜுவிடம் காட்டினால்.
தலை உச்சியில் வீங்கி இருந்தது. ராஜுவும் சாப்பிட்டுக் கொண்டே இடது கையால் தொட்டு பார்த்து
“என்ன டீ இப்படி வீங்கி இருக்கு, எங்க இடிச்சிக்குன” என்று இட்டிலியை மென்றுக் கொண்டு கேட்டான்.

“டேய் காலையில வந்து உன்ன எழுப்புனதுக்கு நீ கொட்டினது, அதுக்கூட பரவாயில்லை ஆனா எங்க இடிச்சிக்குன கேட்ட பார் அதான் தாங்க முடியில” என்று ராஜுவை கொட்ட சென்றவளை அம்மா வந்து தடுத்து விட்டு
“ஏய் என்னடீ அவன் கூட எப்ப பார்த்தாலும் வம்பு, அவனுக்கு கல்யாணம் ஆவப் போவுது மரியாதையா நடந்துக்கோ இல்ல, வரவ உன் வாயை கிழிப்பா” என்று சிரித்துக் கொண்டு ராஜு சாப்பிட்டு முடித்த தட்டை எடுத்து கழுவினாள்.

“அண்ணி என் சைடு, அண்ணியும் நானும் சேர்ந்து இவன் வாயை கிழிப்போம்” என்றால் சீரியஸாக.

அதற்க்குள் ராஜு புறப்பட ரெடியாக வெளியே ஹாலுக்கு வந்தான், அங்கு கீழே படுத்து உறங்கிக் கொண்டு இருந்த மீதி சொந்தகாரர்களை தாண்டி வாசலில் வந்து ஷுவை அணிந்துக் கொண்டு இருக்கும் போது மதி வந்து எதிரில் நின்றாள்.

“என்ன இன்னொரு கொட்டு வேணுமா” என்றான் ராஜு சிரித்து கொண்டு.

“ஊ மூஞ்சி. . . , இந்தா” என்று கையில் இருந்த பளபள பார்சலை கொடுத்தாள்.

“ஏய் கருப்பி எதுக்கு டீ இதெல்லாம்” என்று பார்சலை பிரித்தான் உள்ளே மேனி மோர் ஹப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே என்று எழுதி அதன் கீழ் ஒரு ரேபான் கண்ணாடி இருந்தது.

“போனாப் போதுன்னு கொடுத்தேன் . . . . . அடுத்த மாசம் என் பர்த்டே வேர வருதுல்ல அதான்” என்று சிரித்தாள்.

“அதான பார்த்தேன் என்னடா காக்காவே வந்து வடை கொடுக்குதுன்னு, மொத்தமா எல்லாத்தையும் கொத்தினு போறத்துக்கு தானா, சரி அம்மாகிட்ட நான் களம்பிட்டேன் சொல்லிடு, வரேன் டீ காக்கா” என்றான்.

“போடா தூங்கு மூஞ்சி மரம்”

“போடீ அண்டங்காக்கா” என்று வந்து காரை எடுத்துக் கொண்டு விரைந்தான்.

“போட சப்பமூக்கு” என்றாள்.

“ஏய் தோ வரேன்” உள்ளே இருந்து அம்மாவின் குரல் கேட்டதும் ஓடி மறைந்தாள்.

டிராபிக் எல்லாம் தாண்டி ஈசிர் ரோடு வந்து சேர்ந்தான். ஒரு பெருமூச்சுடன் அப்பாடி இனிமேல் நிம்மதியாக காரை ஓட்டலாம் என்று நினைத்து போனை எடுத்தான்.

“ஜனனி ஜனனி
ஜகம் நீ அகம் நீ
ஜகதாரணி நீ
பரிபூரணி நீ . . .”
என்று ராஜுவின் செல்லில் கால் வந்தது.

“ஹாய் ஹனி, உனக்கு தான் செய்யலாம்னு செல் எடுத்தேன் நீயே பண்ணிட்ட”

“. . . . . . . . .”

“அத ஏன் கேக்குர, ராத்திரி முழுக்க நாம போன்ல பேசுன எங்க காலையில ஏழுறது, சம லேட் ஆச்சு பத்து மணிக்கு பாண்டி ஆபிஸ்ல இருக்கனும், சரி நம்ம நிச்சயர்தார்தம் ஆல்பம் வந்துடுச்சி பார்த்தியா” என்றான்.

கார் டோல் கேட்டை அடைந்தது கண்ணாடியை இறக்கினான்.

“ஜெனி வெய்ட் எ செக்கண்டு.. . . .சார் ஒரு ரிட்டன் கொடுங்க”

என்றான் டோல் கேட் கவுண்டரில், சீட்டை வாங்கிக் கொண்டு வண்டியை மெதுவாக நகர்த்தினான். ஒரு கொய்யா பழ விற்க்கும் சிறுவன் கண்ணாடி சந்தின் வழியாக கொய்யா பழ கவரை நீட்டி

“சார் சார் வாங்கிக்கொங்க சார், தேன் கொய்யா சார்”

என்று ஓடி வந்தான், கார் வேகம் எடுப்பதை பார்த்து கவரை வேண்டும் என்று உள்ளே போட்டான். கொய்யா பழங்கள் சிதறி ராஜுவின் தொடையில் கொட்டியது. ராஜு கோபத்தொடு காரை நிறுத்தினான்.

“டேய் சென்ஸ் இல்ல” என்றான் பின்னாடி ஓடிவந்த சிறுவனை நோக்கி.

அவன் மூச்சை வாங்கிக் கொண்டு

“. . . இ. . . இல்ல. . . இல்ல சார் கொய்யா மட்டும்தா இருக்கு” என்றான் பரிதாபமாக. சீட்டின் மேல் இருந்த போனில் சிரிப்பு ஓலி கேட்டது. இவனும் சிரித்துக் கொண்டு பத்து ரூபாய் எடுத்து நீட்டினான்.

“தாங்ஸ் சார் அடுத்தவாட்டி வாங்க அந்த பழம் வாங்கி வைக்கிறேன்”

என்று அடுத்த காரில் இதே போல நூதன வியாபாரம் செய்ய ஓடினான் அந்த சிறுவன். போனில் சிரிப்பு ஓலி அதிகமாக கேட்டது. ராஜு போனை எடுத்தான்

“. . . . . . . . .”

ராஜு சிரித்துக் கொண்டு “பல்பு எல்லாம் ஒண்ணும் கடையாது, அவனுக்கு இங்கலீஷ் தெரியிலனா நான் என்ன பண்றது”

“. . . . . . .”

மறுபடியும் சிரித்து “அவசரத்துல வந்துடுச்சி விடு, சரி பட்டு செம லேட்டு யிடுச்சு வில் கால் யூ லேட்டர்” என்றான்.

“. . . . . . .”

“ஓகே சுவீட்டி ப்ப்ச்ச்ச்ச்” என்று போனை கட் செய்தான்.

காரை அவசரத்தில் வேகமாக ஓட்டினான் முன்னே இருந்த பைக்கை ஓவர் டேக் செய்தான். குறுகிய வளைவு வந்ததினால் ப்ரேக்கை அழுத்தினான், ஆனால் அழுத்த முடியவில்லை எதோ தடுத்தது பதற்றத்துடன் கீழே பார்த்தான் ப்ரேக்கு கீழ் கொய்யா பழம் மாட்டிக் கொண்டு இருந்தது, அவனால் குனிந்து எடுக்க முடியவில்லை. கார் வளைவை நெருங்கியது ராஜுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ப்ரேக் மேல் ஏறி நின்றான். கொய்யா பழம் நசுங்கி வண்டி பேய் சப்ததுடன் நின்றது.

ஆண்டவன் புண்யத்தில் எதிரே எந்த வண்டியும் வரவில்லை என்று சந்தோஷமாக பெருமூச்சு விட்டான் கண் இமைக்கும் நேரத்தில் காரின் பின்னாடி

“டமார். . .ர்” என்ற சத்தம் ராஜுவை நிலைக்குலைய வைத்தது. குனிந்து இருந்த ராஜு நிமிர்ந்தான் அவன் காரின் மேலே ஒரு ஆள் பைக்குடன் பறந்து போய் நடு ரோட்டில் விழந்தான், பைக்கு ஒரு புதர் பக்கத்தில் விழந்தது. ராஜு அவரை தூக்கி காரின் முன் சீட்டில் போட்டுக் கொண்டு வேகமாக காரை ஓட்டினான். அடிப்பட்டவர் மூப்பது வயது இருக்கும் கழுத்தில் தங்க சங்கிலி இருந்தது,கையில் மோதிரம், ப்ரேஸ்லட் இருந்தது. சுயநினைவுடன் தான் இருந்தார். மூச்சு விட சிரமப்பட்டார் உடனே ராஜு ஏசியை அவர் பக்கம் திருப்பினான்.

“ப்பா. . . என் தப்பா” என்றார்.

“இல்ல சார், இல்ல சார் என் தப்புதான் சார் சாரி சார்” என்றான் கலங்கிய கண்ணகளுடன்.

“சாரி. . . . . வச்சின்னு.. . . .ஓன். . . பண்ணமுடியாது” என்று கூறி வண்டியை நிறுத்த சொல்லி கையை அசைத்தார். ராஜுவும் பதட்டத்துடன் காரை நிறுத்தினான். தண்ணி கேட்டார். குடிக்க முடியாமல் கஷ்டப்பட்டு குடித்தார்.

“இந்த சைடு எந்த ஆஸ்பத்திரியும் இல்லை. . . . நெஞ்சு ரொம்ப வலிக்குது” என்றதும் ராஜு மார்பை தேய்துவிட சீட்டில் சாய்ந்து உக்கார்ந்தவரின் சட்டை பட்டனை அவிழ்த்து மார்பை பார்த்து

“ஓ . . ஷ்ட்டு” என்று முகத்தை திருப்பி கொண்டான். நெஞ்சு எலும்புகள் அனைத்தும் நொறுங்கி வெளியே குத்திக் கொண்டு இருந்தது.

“காரை ஓட்டத்தெரியாம . . . . .ஏண்டா . . . . தாலி அறுக்குரிங்க. . . என்ன வயசு. . . உனக்கு. . .” என்றார் அடிப்பட்டவர்.

“இன்னையோட 25 முடியுது சார்”

“ப்பாத்து வரகூடாதா. . . எனக்கும் கஷ்டம் . . உனக்கும் . .கஷ். . .” என்றார்.

ராஜு தலையில் அடித்துக் கொண்டு “எனக்கு இன்னும் இரண்டு நாள்ள கல்யாணம் சார்” என்று அழுதான்.

“எனக்கு. . . கல்யாணம் கி. . . . . இரண்டு வாரம் . . . தான் ச்சு. . . . . லவ் மேரேஜ்”

என்றார் அடிபட்டவர் கலங்கி கண்களுடன். ராஜுவுக்கு தூக்கி வாரிப் போட்டது, கண்ணீர் அதிகமாகியது.

“நாங்களும் லவ் மேரேஜ் தான் சார், எனக்கு அதன் வலி தெரியும் நான் எப்படியாவது உங்களை காப்பாத்திடுரேன் சார்” என்று காரை வேகமாக ஸ்டாட் செய்தான். அவர் அவனை ஆப் செய்ய சொல்லி சைகை செய்து சிரமத்துடன் பேசினார்.

“நான் சொல்வதை கேள். . .நான் பொழைக்க மாட்டேன். . .கல்யாணம் வச்சின்னு வீணா வம்புல மாட்டாதே. . . இந்த சைடு டோல் கேட்ல போலீஸ் நீக்கும் தாண்டி . . . போக முடியாது . எப்படியும் டோல் கேட்ல கார் நம்பரை டிரேஸ் பண்ணிடுவாங்க. . .அவ்வுளவு தூரம் நான் தாங்கவும் மாட்டேன் . . . என்னை ஆக்சிடெண்டு . . . ஆன எடத்துல போட்டுட்டு போய்டு. . . .” என்றார்.

“சார் என்ன சார், வேண்டாம் எந்த பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்குறேன்” என்றான் ராஜு.

“ஒருத்தியோட வாழ்க்கை தான் போச்சு . . . இன்னொருத்திதும் வீணாக வேண்டாம், அவளை சந்தோஷமா வச்சிக்கோ” என்றார்.

ராஜுவுக்கு அவர் காலை தொட்டு கும்பிடவேண்டும் போல இருந்தது. கண்ணீருடன் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவர் வண்டியை திருப்ப சொல்லி சைகை காட்டினார். ராஜுவும் செய்வது அறியாது அவர் சொன்ன மாதிரி வண்டியை திருப்பினான். அவர் தனக்குள் பேசிக் கொண்டு வந்தார்.

“எல்லாரையும் எதிர்த்து. . . என்னை மட்டும் நம்பி . . .
வந்தியே. . . . , உன்ன தனியா விட்டுட்டு போறனே. . . ..எப்படியொல்லாம் உன்ன வாழ வைக்கனும். . . . . . நனச். . . . . . செல்லம் என்ன மன்னிச்சுடு டீ. . மன்னிச் . .”.

கார் ஆக்ஸிடண்ட் ஆன இடத்தை அடைந்தது. ராஜு வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு கதவை திறந்து

“சார் எடம் வந்துடுச்சு” என்றான்

,ஆனால் அவர் உயிருடன் இல்லை. தூரத்தில் போலீஸ் சயரன் சத்தம் கேட்டது ராஜுவுக்கு பதற்றம் அதிகமாகியது. அவரை அவசரமாக தூக்கினான், அவர் பாக்கெட்டில் இருந்து ஒரு கார்டும், செல்லும் ராஜுவின் காரில் விழுந்தது ராஜு அதை கவனிக்கவில்லை. அவரை பைக் கிடந்த இடத்துக்கு பக்கத்தில் நிழலில் கிடத்திவிட்டு அவசரமாக காரை எடுத்துக் கொண்டு வேகமாக விரைந்தான். ராஜுவின் மனசாட்சி அவனை கொன்றது. கண்களில் கண்ணீர் பொங்க காரை ஓட்டினான். அப்பொழுது சீட்டின் மேலே இருந்த கார்டையும்,செல்யும் பார்த்தான். அந்த ஐ.டீ கார்டை எடுத்து பார்த்தான்

“ S. Rangarajan
sub-inspector
crime branch
pondy”

என்று இருந்தது. ராஜுவின் கார் தடுமாறி ஓரத்தில் நின்றது. அப்பொழுது அந்த செல்லில் கால் வந்தது.

“உனக்கே உயிரானேன்
என்னாலும் எனை நீ மறவாதே,
நீயில்லாமல் ஏது நிம்மதி
நீ தான் என்றும் என் சன்னிதி. . .
கண்ணே கலைமானே. . . . . .”
என்ற பாடல்.
ராஜு செல்லை எடுத்து பார்த்தான்.

“செல்ல குட்டி காலிங்” என்று வந்தது.

No comments:

Post a Comment